Thursday, November 1, 2012

பிருகு- நந்தி நாடி முறையில் வரவு –செலவு அறியும் விதம்:-


பிருகு- நந்தி நாடி முறையில் வரவு –செலவு அறியும் விதம்:-

பராசரர் ஜோதிட முறையில் பண வரவைக்குறிக்குமிடம் 2ம் பாவமாகும், செலவுகளைக்குறிக்குமிடம் 12ம் பாவமாகும். பிருகு-நந்தி நாடி முறையில் பாவங்களைக்கொண்டு பலன் கூறுவதில்லை. கிரகங்களைக்கொண்டே பலன் கூறப்படுகிறது. நாடி முறைப்படி ஜீவக்காரகனுக்கு 2ல் ஏதாவது ஒரு கிரகமாவது நின்றிருந்தால் ஜாதகருக்கு பண வரவு உண்டு. ஜீவக்காரகனுக்கு 12ல் கிரகங்கள் நின்றிருந்தால் ஜாதகருக்கு தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டு. வரவு –செலவு சம்பந்தமான நாடி விதிகளைப்பார்ப்போம்.

1.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 2ல் பல கிரகங்கள் நின்றால் ஜாதகருக்கு பல வழிகளில் பண வரவு உண்டு.மேலும் பல நபர்களின் உதவிகள் ஜாதகருக்கு கிடைக்கும்.

2.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 12ல் பல கிரகங்கள் நின்றால் ஜாதகருக்கு தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டு.

3.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 2ல் அதிகப்படியான எண்ணிக்கையில் கிரகங்களும், 12ல் குறைந்த எண்ணிக்கையில் கிரகங்களும் நின்றால் ஜாதகருக்கு வரவு அதிகம்,செலவு குறைவு.

4.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 12ல் அதிகப்படியான எண்ணிக்கையில் கிரகங்களும், 2ல் குறைந்த எண்ணிக்கையில் கிரகங்களும் நின்றால் ஜாதகருக்கு வரவு குறைவு,செலவு அதிகம்.

5.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 2ல் பல கிரகங்கள் நின்றிருக்க ,12ல் கிரகங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பண வரவு உண்டு.ஆனால் பெரிய அளவில் செலவினங்கள் எதுவும் இருக்காது.

6.         ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 12ல் பல கிரகங்கள் நின்றிருக்க ,2ல் கிரகங்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு பண வரவு பெரிய அளவில் எதுவும் இருக்காது. ஆனால் தவிர்க்க முடியாத செலவினங்கள் இருந்துகொண்டேயிருக்கும்.

7.         பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு2-12ல் உள்ள கிரக நிலைகளைப்பார்த்து மேற்கண்ட பலாபலன்களைக்கூறவேண்டும்.